கோவை மனம் (576-600)

 கோவை மனம் 576.      உதவிகள் செய்தால் வழிப்போக்கனும் உறவாவான்.  உதவிகள் கேட்டால் இரத்த உறவும் எட்டி நிற்கும் பொல்லாத உலகம் இது.

கோவை மனம் 577.      இறந்தவர்களுக்குச் சிலை வைப்பதை விட இல்லாதோருக்கு இலை போடு, செய்த தவறுகள் தீயாய்ப் போகும்.

கோவை மனம் 578.      தவறிழைக்காமல் தன்மானத்திற்குச் சீர்கேடு வந்தால் எவராக இருந்தாலும் எதிர்த்து நில்.

கோவை மனம் 579.      யாரைப் போலவும் வாழாமல், தன்னுடைய பாதையில் இயல்பு மாறாமல் பயணம் செய். அதுவே, உன்னை தலை நிமிரச் செய்யும்.

கோவை மனம் 580.      இப்போதைக்கு மரணம் இல்லை என்று நினைப்பவன் பொருள் சேர்ப்பதில் நாயாய் அலைவான்.  எப்பொழுதும் மரணம் வரலாம் என்று நினைப்பவன் வாழ்க்கை ஒவ்வொரு பொழுதும் அனுபவித்து வாழ்வான்.

கோவை மனம் 581.      நிர்வாணத்தில் காமத்தைக் காணாதவனிடம் உண்மையான அன்பு குடிகொண்டிருக்கும்.

கோவை மனம் 582.      உன்னை எதிர்ப்பவரை நேர்மையாக எதிர்த்து நில். உலகம் உன் பின்னால் நிற்கும்.

கோவை மனம் 583.      அனாதையாக்கப்பட்ட நெஞ்சமானது கூட்டை இழந்த குருவியைப் போல அன்பாய் யார் பேசினாலும் அப்படியே நம்பும்.

கோவை மனம் 584.      அஞ்சியும் கெஞ்சியும் வாழாமல் நேர்மையாய் வாழ்.

கோவை மனம் 585.      ஒருவனுக்கு நீ தேவைப்படும் வரையே நல்லவன்.  அவனுடைய தேவை முடிந்த பிறகு நீயே அவனக்குக் கெட்டவன்.

கோவை மனம் 586.      பசிக்கும் போது கூட தன் உழைப்பினால் மட்டுமே உண்பவன் உண்மையான மனிதன்.

கோவை மனம் 587.      வேடிக்கை பார்ப்பவர்களுக்குப் பாதிக்கப்பட்டவரின் வலி புரியாது.

கோவை மனம் 588.      ஒருவனுக்கு, உன்னுடைய நேர்மையைவிட மற்றொருவர் முக்கியமாகிவிடும்போது தன் மானத்துடன் விலகிச் செல்.

கோவை மனம் 589.      கடிக்கும் விலங்குகளோடு வாழ்ந்து விடலாம்.  ஆனால், நடிக்கும் மனிதர்களோடு வாழ்வது கடினம்.

கோவை மனம் 590.      துணியாதவரை வாழ்க்கையில் அச்சம் காட்டும்.  துணிந்த பிறகு வாழ்க்கையில் வெளிச்சம் காட்டும்.

கோவை மனம் 591.      படிக்காதவன் கல்லூரியின் முதலாளி ஆகலாம்.  ஆனால், அவனால் கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க முடியாது.

கோவை  மனம் 592.     ஒட்டாத உறவுகள் உன்னை நேசிக்கவில்லை என்பதை உணர்.

கோவை மனம் 593.      நீ விழும் போது முதலில் உதவி செய்பவன், ஏற்கெனவே தானும் அந்த வலியை உணர்ந்தவனாக இருப்பான்.

கோவை மனம் 594.      உனக்கு ஏற்பட்ட அவமானமே, நீ யாரென்று உனக்குப் புரிய வைக்கும் ஆயுதம்.

கோவை மனம் 595.      யாருடைய உதவியும் கிடைக்காத வரை தானாக தன்னைக் காக்க முயற்சிப்பவன், உதவி கிடைத்தவுடன் தன்னுடைய முயற்சியைக் கைவிடுவான்.

கோவை மனம் 596.      வைத்த இடத்தில் வைத்த பொருள் இல்லாதபோது அலைபாயும் மனம்.  பொருள் சென்ற இடமும் இருக்கும் இடமும் அறிந்ததும் மனம் அமைதி கொள்ளும்.

கோவை மனம் 597.      யார் சொல்லையும் கேட்காதவரும், யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்புபவரும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது.

கோவை மனம் 598.      இன்று இல்லை என்பதற்காக வாடாதே.  இன்று எல்லாம் இருக்கிறதே என்று ஆடாதே. வாழ்க்கை, நேர்க்கோடல்ல. அதுவொரு சக்கரம்.

கோவை மனம் 599.      தவறான புரிதல் இருக்கும் இடத்தில் எப்பேர்ப்பட்ட விளக்கமும் எடுபடாது.

கோவை மனம் 600.      காயப்படுத்தியவரை மன்னித்துக் கடந்து செல். அப்போதுதான் உன்னுடைய மன வலியின் உச்சம் புரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவை மனம் (701-725)

கோவை மனம் (626-650)

கோவை மனம் (751-775)