கோவை மனம் (176-200)

 கோவை மனம் 176. சுற்றம் இழந்த குற்றவன் சுத்தமாக வாழ்ந்தால் சுற்றங்கள் மீண்டும் தானாய் வந்திணையும்.

கோவை மனம் 177. ஒத்த மனமும் ஒத்த எண்ணமும் ஒத்த உணர்வும் கொண்டவனை நண்பனாகக் கொள்.

கோவை மனம் 178. என்னால் இது முடியாது என்பதைத் தவிர்த்து முடியும் என்று நம்பிக்கையோடு முயற்சி செய், முடியாததும் முடியும்.

கோவை மனம் 179. உங்கள் மீது முழுமையாக நம்பிக்கை வை, நீங்களே வெற்றியாளர்.

கோவை மனம் 180. ஒருவனுக்கு ஏற்படும் எதிர்மறையான நிகழ்வே அவன் மேன்மைக்கா விதை.

கோவை மனம் 181. உடல் வலிமையால் செய்ய முடியாததையும் மன வலிமை செய்து முடிக்கும்.

கோவை மனம் 182. அதிக சுகம் கேடு தரும்.

கோவை மனம் 183. உன்னை மதிக்காதவரைச் சந்திக்கவும் சிந்திக்கவும் செய்யாதே.

கோவை மனம் 184. மெளனப் பாசமும் போலிப் பாசமும் நாசமாகும். ஊரும் உலகமும் உண்மைப் பாசம் உணர வாழ்.

கோவை மனம் 185. நினைவைப் போற்றுவது சுகமானது.

கோவை மனம் 186. மிதிபட்டாலும் மிதிப்பவரைக் காக்கும் மிதியடி(செருப்பு) போல் தனக்கே பாதுகாப்பு இல்லாத போது தக்காரைக் காப்பாற்றுபவனே மனிதரில் மாணிக்கம்.

கோவை மனம் 187. கணவனும் மனைவியும் மனம் ஒத்த வாழ்க்கை வாழ்ந்தால் அவர்களின் வாழ்க்கை செம்புலப் பெயல்நீர் போல் அமையும்.

கோவை மனம் 188. சுவையையே பார்த்த நாக்கு நெருக்கடி காலத்தில் கிடைத்த உணவை ஏற்கும்.

கோவை மனம் 189. நல்லதையே பேசு, நல்லதையே செய், நல்லதையே நினை; உன்னைச் சூழ்ந்த கேடு தானாய் விலகும்.

கோவை மனம் 190. கடல் சீற்றம் கொண்டால் பெரும் பாதிப்பு நிலத்தில் அமைவது போல் கணவன்-மனைவிக்குள் ஏற்படும் மோதல் தன் பிள்ளைகளையே பெருமளவு பாதிக்கும்.

கோவை மனம் 191. சகுனியை வெல்ல அறிவாளத் தன்மையோடு சகுனியாகவும் செயல்படு.

கோவை மனம் 192. எல்லோர் மனதிலும் சிறந்து வாழ்ந்தவர்கள் இறந்தாலும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள்.

கோவை மனம் 193. சுமப்பதைச் சுமை தாங்கி போல் சுமப்பதில் சுகம் காண்பவர் தந்தை.

கோவை மனம் 194. ஒத்ததை ஒத்தது அறிவதுபோல் மகனின் துடிப்பைவிட மகளின் துடிப்பை அதிகம் உணர்பவள் தாய்.

கோவை மனம் 195. பிறர் சமயத்தையும் அறிந்து உணர்ந்து மதித்துத் தன் சமயத்தைப் போற்றுபவனே சமயவாதி.

கோவை மனம் 196. துரோகி செய்யும் துரோகத்தைவிட உற்ற நண்பன் செய்யும் துரோகமானது இமையே கண்ணைக் குத்துவது போன்றதாகும்.

கோவை மனம் 197. நம்பினோர் எல்லாம் துரோகிகளாக இருக்கும்போது உனக்கு நீயே தூண். இதைப் புரிந்த பின் இனியாவது கவனமுடன் வாழ்.

கோவை மனம் 198. மறதியும் நல்ல தூக்கமும் இருந்தால் நரக வாழ்க்கை விடுதலை பெறும்.

கோவை மனம் 199. ஆழ்கடலில் உள்ள பொற்குவியலை அனுபவிக்காமல் கரையில் சுகத்தைத் தேடும் அலையைப்போல் புறச்சுகத்திற்கு அலைபவர்கள் பாவிகள்.

கோவை மனம் 200. கோடித் துணி கூட உனக்குச் சொந்தமில்லை என்பதை உணர், உன் வாழ்க்கை மிளிரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவை மனம் (701-725)

கோவை மனம் (726-750)

கோவை மனம் (751-775)