கோவை மனம் (101-125)

 கோவை மனம் 101. குறையொன்றும் இல்லாமல் குடிசையில் ஏக்கமின்றி வாழ்ந்தால் அதுவே அவனுக்குச் சொர்க்கம்.

கோவை மனம் 102. பிறரைப் போல வாழ நினைப்பது போலி வாழ்க்கை.  நீ நீயாக வாழ்ந்தால், நீ சாதிப்பதெல்லாம் உன்னுடைய சாதனையே.

கோவை மனம் 103. வாங்கிய பொருளைப் பயன்படுத்தாமல் இருப்பதும், யாருக்கும் கொடுக்காமல் வைத்திருப்பதும் அந்தப் பொருள் உற்பத்தியாகாமலே இருந்திருக்கலாம்.

கோவை மனம் 104. பசிக்கும்போது அழுபவன் மனிதன், அலைபவன் பாவி.

கோவை மனம் 105. வல்லவன் நிலை தடுமாறும் போது புல்லவன் கை ஓங்கும்.

கோவை மனம் 106. உனக்குத் தெரிந்தவர்களுக்கு உன்னைத் தெரியாமலிருக்கலாம்.  ஆனால், உன்னைத் தெரிந்தவர்களை நீ தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

கோவை மனம் 107. கண்ட தோற்றத்திலேயே மனம் ஒன்றியிருப்பதெல்லாம் அழகல்ல. நினைவிலும் கனவிலும் எவன் செயற்பாட்டில் மனம் ஒன்றுகிறதோ அதுவே அழகு.

கோவை மனம் 108. எப்படியும் வாழலாம் என்பவனைவிட இப்படித்தான் வாழ்வேன் என்று கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவனுக்குச் சோதனைகள் பல வரும். அச்சோதனைகள் நிலையானது அல்ல. வந்த சோதனைகளைச் சாதனைகளாக்குபவனே வாழ்க்கையில் வெற்றி பெற்றவனாவான்.

கோவை மனம் 109. தன்னுடைய அனுபவங்களின் தொகுப்பிலிருந்து பலர் பின்பற்றும்படி வாழ்ந்தாலே வாழ்ந்தவன் இறவாத புகழ் பெற்றவனாவான்.

கோவை மனம் 110. எதிரிகளே இல்லாத சபையில் தானே முதல்வன் என்பதில் பெருமை இல்லை. ஆனால் எதிரிகள் நிறைந்த சபையில் எதிரிகளும் போற்றும் வண்ணம் திகழ்பவரே உண்மையில் உன்னதமான முதல்வன் ஆவான்.

கோவை மனம் 111. எதிரிகளே இல்லாமல் வாழ்பவன் கோழை.

கோவை மனம் 112. உன்னை மதிக்காதவனை அரியணையிலும் பார்க்காதே.

கோவை மனம் 113. அரண்மனைச் செய்தியே யானாலும் அறிவுக்கே இடம் கொடு.

கோவை மனம் 114. பிடிவாதக்காரன், தனக்குப் பிடிக்காத செயலை மற்றவர்கள் செய்வதைத் தடுப்பான்.

கோவை மனம் 115. வஞ்சனை செய்வோனிடம் தஞ்சம் புகாதே.

கோவை மனம் 116. ஓட்டுநரே உரிமையாளராக இருக்கும்போது சேதாரம் குறைவாக இருக்கும்.

கோவை மனம் 117. மறித்தால், பூனையும் புலியாகும்.

கோவை மனம் 118. புலியை அடைத்தாலும் புலி புலியாகத்தான் இருக்கும்.

கோவை மனம் 119. மனம் இல்லாதோர் கொடுக்கும் பணத்தை எப்போதும் ஏற்காதே.

கோவை மனம் 120. தன்னுடைய தாகம் தணிய உகந்ததை மட்டும் கொள். பிறரின் தாகம் தணிக்க அவரால் ஏற்பதை மட்டும் கொடு. அறம் சிறக்கும்.

கோவை மனம் 121. உங்கள் மீது தவறுகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டாலே உங்களின் அமைதி பாதுகாக்கப்படும்.

கோவை மனம் 122. அஞ்சத்தக்க இடத்தில் அஞ்சாதவன் அழிவான்.

கோவை மனம் 123. நல்லோரை வஞ்சிக்காதே. வஞ்சித்தால் வஞ்சிக்கப்படுவீர்.

கோவை மனம் 124. வல்லோரின் பொறுமை புல்லோர்க்குத் தற்காலிகப் பெருமை.

கோவை மனம் 125. நல்லோர் சொல் கேட்காவிட்டாலும் புல்லோர் சொல் கேளாதீர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவை மனம் (701-725)

கோவை மனம் (726-750)

கோவை மனம் (751-775)