கோவை மனம் (1-25)
கோவை மனம் 1. நீ வளமாக இருந்தபோது உன் அருகில் இருந்தவர்களை விட, வருத்தப்பட்டு இருக்கும்போது உன் அருகில் இருப்பவர்களே உன்னை நேசிப்பவர்கள்.
கோவை மனம் 2. நீ,
கோபப்பட்டுப் பேசும் போது நெடுநாளாக உன் உள்ளத்தில் உள்ளது வெளிப்படும்.
கோபத்தில் பேசும்போது கவனமாகப் பேசினால் உன்னை நீ காப்பாய்.
கோவை மனம் 3. ஒரு செயலைச்
செய்யும்போது, சிந்தித்துச் செயற்பட்டால் வெற்றி நிச்சயம். சிந்தித்துச்
செய்யாத எந்தவொரு செயலும் தோல்வியில் முடியும்.
கோவை மனம் 4. நீ,
தந்தை ஆன போது இருந்த உணர்வு, உன் தந்தை,
தந்தை ஆன போது இருந்திருக்கும். காலம் மாறலாம் உணர்வு மாறாதது.
கோவை மனம் 5. உன்னால்
வளர்ந்தவர்கள் உன்னை மதிக்கவில்லை என்றாலும் கவலை கொள்ளாதே. அது குறித்து அவர்களே வருத்தப்படும்
காலம் வரும்.
கோவை மனம் 6. எதிரியை
எப்பொழுதும் எதிரியாக எண்ணாமல் நண்பனாகவே கருதிப்பார். ஒருநாள் அவனே உனது உற்ற நண்பனாவான்.
கோவை மனம் 7. உன் செயலைப்
பாராட்டுபவனை விட குறை சொல்பவனை அருகில் வைத்துக் கொள்.
கோவை மனம் 8. உன் பொருள்
ஒன்றை ஒருவன் கவர்ந்தான் என்றால் அவனுக்கு ஏதோவொரு காலத்தில் நீ அவனுக்குக் கடமைபட்டிருக்க
வேண்டும். அப்பொருளின் முக்கியத்துவம் இழந்தவனுக்குப் பேரிழப்பு. என்றாலும் எதிர் காலத்தில்
இதுபோன்றதொரு தவறு இதைவிட பெரிதாக நிகழாமல் இருக்க இதுவொரு அழைப்பு மணி.
கோவை மனம் 9. கணவனோ மனைவியோ
நோய்வாய்ப்படும் பொழுதுதான் அவர்களுக்குள் உள்ள உண்மையான அன்பு வெளிப்படும்.
கோவை மனம் 10. ஒருவன்
ஆணித்தரமாக ஒரு செய்தியைப் பேசும் போது கண்ணில் மயக்கமோ வார்த்தையில் தயக்கமோ இல்லாத
போது அச்செய்தி உண்மை உடையதாகவே கொள்ள வேண்டும்.
கோவை மனம் 11. தற்செயலான
சுகம் நிரந்தரமல்ல என்பதை உணர்ந்து கொண்டாலே நீ உன் வாழ்வில் மேன்மை அடைவாய்.
கோவை மனம் 12. பலனை எதிர்பார்பார்க்காமல்
செய்த உதவி சிறிதெனினும் உதவி பெற்றவனுக்கு அவ்வுதவி பேருதவியாகும்.
கோவை மனம் 13. மண்ணும்
பெண்ணும் ஒருவனுக்கு அமைவதைப் பொறுத்தே அவனது வீடுபேறு நிலை அமையும்.
கோவை மனம் 14. இனி இழப்பதற்கு
ஒன்றுமில்லை என்ற நிலை வந்தபோதும் தன்னம்பிக்கையோடு செயற்பட்டால் இழந்தவை தானாக தன்னை
வந்தடையும்.
கோவை மனம் 15. தாயும்
தந்தையுமாக இருந்து ஒரு தாய் தன் மகனை அவையில் முந்தியிருப்பச் செய்ததற்கு மகன் அந்தத்
தாய்க்கு ஆற்றும் உதவி அவ்வவையில் தன் தாயை முன்னிலைப்படுத்துவதே சிறந்த மகனுக்கு அழகு.
கோவை மனம் 16.
தான் கற்றதையும் கற்றபின் அது தொடர்பாக உணர்ந்ததையும் சேர்த்து
கற்பிப்பவரே நல்ல ஆசிரியர்.
கோவை மனம் 17. உயர் பதவிகள்
பல பெற்ற பின்னும் தனக்குக் கற்பித்த ஆசிரியர்களைத் தக்க நேரத்தில் நினைவு கூர்வது
நல்ல மாணவர்க்கு அழகு.
கோவை மனம் 18. சேமிப்பும்
வருவாயும் இல்லாத போது துன்பங்கள் அணி வகுத்து நிற்கும்.
கோவை மனம் 19. அதிக ஈடுபாட்டோடு
செய்த ஒருவேலை தன்னைவிட்டுப் போகும் போதும் கலங்காமல் எதிர்கொண்டால் தானாக அவ்வேலை
உன்னை வந்து சேரும்.
கோவை மனம் 20. எதைவேண்டுமானாலும்
அழிப்பது எல்லோராலும் எளிதாக முடியும். ஆனால்
சிலரால் மட்டுமே சிலவற்றை ஆக்க முடியும்.
கோவை மனம் 21. ஆழ்
மனதில் இருந்து உண்மையாக எல்லோரிடமும் நீ நடந்துக்கொண்டால். அவர்களுக்கு நீயே
கடவுள்.
கோவை மனம் 22. எவ்வளவுதான்
உயர் பதவிகள் பெற்று உலகையே சுற்றி வந்து வாழ்ந்துக் கொண்டு இருந்தாலும் தொட்டில்
மண்ணில் உன் தாயையும் உறவுகளையும் சந்திக்கும்போது உண்டாகும் மகிழ்ச்சியே
உன்னதமானதும் உண்மையானதும் ஆகும்.
கோவை மனம் 23. கெட்ட
எண்ணம் கொண்டவர்கள் சூழ்நிலையால் நிகழ்காலத்தில் புகழோடு வாழ்ந்து வருவர். ஆனால்
நல்ல எண்ணம் கொண்டவர்கள் சூழ்நிலையால் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்தாலும் காலம்
அவர்களை அடையாளம் காட்டும்போது அழியா புகழை எய்துவர்.
கோவை மனம் 24. பல்வேறு
எதிர்ப்புகளுக்கு இடையே உன்னை நீ வளர்த்துக் கொண்டால் நிலையான புகழ் அடைவாய்.
கருத்துகள்
கருத்துரையிடுக